திருடு போன போனில் இருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்: ரயில்வே போலீசார் விசாரணை

திருவள்ளூர், ஆக.18: திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு புறநகர் மின்சார ரயில்களும், திருவள்ளூர் வழியாக விரைவு ரயில்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 11ம் தேதி நள்ளிரவு, தென்னக ரயில்வே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துவிட்டு, போனை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார், ரயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன்கால் நம்பரைக் கொண்டு ரயில்வே போலீசர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், அந்த செல்போன் நம்பர் திருத்தணி பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம்(70) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனையடுத்து, முதியவர் முனிரத்தினத்தை திருவள்ளூர் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனது செல்போன் திருடு போய்விட்டதாக முதியவர் முனிரத்தினம் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார் முனிரத்தினத்தை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்தனர். மேலும், திருவள்ளூரில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

 

Related Stories: