மேலூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்; காதல் விவகாரத்தில் பைக் மீது காரை ஏற்றி வாலிபர் படுகொலை: காதலியும் படுகாயம்: 10 பேருக்கு வலை

 

மேலூர்: மேலூர் அருகே காதல் விவகாரத்தில் பைக் மீது காரை ஏற்றியும், அடித்தும் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே பூதமங்கலம் பகுதியில் உள்ள பொட்டபட்டியை சேர்ந்தவர் ராகவி (24). இவரது கணவர் செல்வம். இவர்களுக்கு 2 குழந்தைகள். செல்வம் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். குழந்தைகள் இருவரும் ராகவியின் பெற்றோரிடம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (21) என்பவரும், ராகவியும் காதலித்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். பின்னர், இருவரும் திருச்சியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கு ராகவியின் பெற்றோர், சகோதரர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. செல்வத்தை திருமணம் செய்தபோது தாங்கள் போட்ட தங்க நகைகளைத் தரும்படி ராகவியின் பெற்றோர் கேட்டனர். ஆனால் ராகவி அவற்றை சதீஷ்குமாரிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்த பெற்றோர், சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த ராகவியை திரும்ப சதீஷ்குமாருடன் செல்ல வேண்டாம் எனக்கூறி வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த சதீஷ்குமார் கடந்த 14ம் தேதி மேலூர் மகளிர் காவல் நிலையத்தில், ‘‘நானும், ராகவியும் திருமணம் செய்துகொண்டோம். எனது மனைவி ராகவியை காணவில்லை. கண்டுபிடித்துத் தாருங்கள்’’ என்று புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் சதீஷ்குமார், ராகவி ஆகியோருடன், ராகவியின் பெற்றோர் குடும்பத்தினரையும் அழைத்து நேற்று முன்தினம் தொடர் விசாரணை நடத்தினர்.

அப்போது நகைகளை தர மறுத்ததுடன், சதீஷ்குமாருடன்தான் வாழ்வேன் என ராகவி தெரிவித்தார். இரவு வெகுநேரம் ஆனதால், ‘‘மறுநாள் விசாரணைக்கு வாருங்கள். வரும்போது முறைப்படி திருமணம் செய்ததற்கான ஆதாரங்களை கொண்டு வாருங்கள்’’ அனைவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர். சதீஷ்குமார், ராகவி இருவரும் நள்ளிரவு 12 மணியளவில் பைக்கில் திருச்சிக்கு புறப்பட்டனர். அவர்களை ராகவி குடும்பத்தினர் காரில் பின்தொடர்ந்துள்ளனர்.

மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் அய்யாபட்டி விலக்கு பகுதி அருகே சென்றபோது, சதீஷ்குமார் பைக் மீது ராகவி குடும்பத்தினரின் கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சதீஷ்குமார், ராகவி இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்தனர். ஆத்திரம் அடங்காத பெண்ணின் குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கி இருவரையும் கம்பியாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் பலத்த காயங்களுடன் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து கொட்டாம்பட்டி போலீசார் வந்து, சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகவி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது புகாரின்பேரில், அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: