நாகர்கோவில்: நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: முன்பு ஆயுதப்படையில் பணியாற்றியபோது அங்கு போலீஸ்காரர் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நான் காவல் நிலைய பணிக்கு வந்த பின், அவர் என்னுடன் பழகுவதை குறைத்து கொண்டார்.
விசாரித்த போது, ஆயுதப்படையில் பணியாற்றும் மற்றொரு பெண் போலீசுடன் அவர் பழகி வருவதும், அவரையே திருமணம் செய்ய இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து கேட்ட போது உன்னுடன் நட்பாகத்தான் பழகினேன் என கூறுகிறார். என்னை திருமணம் செய்வதாக கூறி, நெருங்கி பழகிவிட்டு ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில் அவர், நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகினோம். எங்களுக்குள் வேறு எந்த பழக்கமும் கிடையாது. எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது என்றார். பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இருவரும் நெருங்கி பழகியதற்கான ஆதாரங்கள் சிலவற்றை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
