×

ஓய்வுபெற்ற நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்குவதாக கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். தனக்கெதிராக புகார் அளித்த வாஞ்சிநாதனை அழைத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை நடத்தினார். இதையடுத்து, வாஞ்சி நாதன் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பல ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நீதிபதிகளுக்கு எதிரான கருத்துகளை ஓய்வுபெற்ற நீதிபதிகள் பொது வெளியில் வெளியிட தடை விதிக்கக்கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, நீதிபதிகள் குறித்த அறிக்கைகளை பொது வெளியில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெளியிட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவார்கள் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதித்துறை விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று எச்சரித்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Chennai ,Vanchinathan ,Chief Justice ,Supreme Court ,Madras High Court ,Judge ,G.R. Swaminathan ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...