சென்னை: செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் தொடங்கும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர். அரசு பொறுப்பேற்ற ஆண்டில் 2021-22 நெல் கொள்முதல் பருவத்தில் 43.27லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்வரின் பொற்கால ஆட்சியில் என்றுமில்லாத அளவிற்கு நேற்று வரை 46.5லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல்கொள்முதல் பருவம் அக்டோபர் முதல் நாள் தான் தொடங்கும். செப்டம்பரில் அறுவடையாகும் நெல்லை மழைக் காலத்தில் அக்டோபர் மாதத்தில் வாங்கும் நிலை தான் இருந்தது. இதை மாற்றி செப்டம்பர் மாதமே அக்டோபரில் தொடங்கும் பருவ விலையில் நெல் கொள்முதல் செய்திட முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்று 2022-2023 ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் செப்டம்பர் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
