சனா: கேரளா மாநிலம் பாலக்காடைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா, ஏமனில் அந் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு கிளினிக்கை தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மஹ்திக்கு அதிகப்படியான மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.
அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது. பலதரப்பு பேச்சுவார்த்தை அடிப்படையில் தண்டனை நிறைவேற்றம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நிமிஷாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உயிரிழந்த மஹ்தியின் குடும்பத்தினர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றுவது மட்டுமே தங்களின் ஒரே கோரிக்கை என அவரின் சகோதரர் அப்துல் பத்தா மஹ்தி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஏமனின் மேஜர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்த கடிதத்தில்,’நாங்கள் எந்த மாற்று ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை மீண்டும் மீண்டும் உங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். எனவே தாமதம் இல்லாமல் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்கிற எங்களின் இறுதி முடிவையும், உறுதியான நிலைப்பாட்டையும், தெளிவான கோரிக்கையையும் நாங்கள் தெரிவித்துவிட்டோம். பழிவாங்கலைத் தவிர வேறு எந்த மாற்றும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
