சென்னை: மாநில கல்வி கொள்கை மீதான சந்தேகங்களுக்கு இரு மொழிகளில் விடையளிக்க தொடங்கியுள்ளேன் என தனது எக்ஸ் தளத்தில் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். மாநில கல்வி கொள்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8ம் தேதி சென்னையில் வெளியிட்டார். அதன் மீது பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மாநில கல்வி கொள்கையின் மீது கருத்து சொல்ல விரும்புவோர் அல்லது சந்தேகங்கள், கேள்விகளை எழுப்புவோர் வசதிக்காக புதிய மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளம் போல் ஆப் ஒன்றை பள்ளிக்கல்வி துறை உருவாக்கி உள்ளது.
அதன் மூலமாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை (பள்ளிக்கல்வி)-2025” குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிப்பது நமது கடமையாகும். அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இருமொழிகளில் (தமிழ், ஆங்கிலம்) விடை அளிக்க தொடங்கியுள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
