செங்கம், ஆக. 9: செங்கம் நகரில் இன்று நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் இன்று கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகளை நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கலெக்டர் தர்ப்பகராஜ் கூறியதாவது: தற்போது மழைபெய்து வருகிறது. இதனால் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரகுங்களை அமைத்து அதற்கு ஏற்றவாறு முகாமினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து மருத்துவ முகாமில் பங்கேற்கும் பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை தேவைகள் மற்றும் ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். முகாமை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது டி.ஆர்.ஓ ராமபிரதீபன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரகாஷ், கோட்டாட்சியர் ராஜ்குமார். தாசில்தார் ராமபிரபு, நகராட்சி ஆணையர் பாரத், வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நகராட்சி ஊழியர்கள் வருவாய் துறை உட்பட பலர் உடனிருந்தனர்.
