சென்னை: தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், கூறுகள் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் அம்சங்கள் குறித்த விவரங்கள்: மாநில கல்விக் கொள்கையின் ஒவ்வொரு இயலும் மறு கட்டமைப்புக்கும், புதுப்பித்தலுக்குமான வழிமுறையை கவனமுடன் முன்வைக்கிறது. மேலும் இது ஒரு எழுச்சி மிக்க, சமத்துவமான மற்றும் எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்தும் கல்வி முறைக்கான ஒரு திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
* மாநிலத்தின் மொழியான தமிழும், தேவையின் அடிப்படையில் ஆங்கிலமும் என்ற அடிப்படையில் இரு மொழிக் கொள்கை அரசின் மொழிக் கொள்கையாக இருக்கும் என்பது தெளிவுபட கூறப்பட்டுள்ளது.
* பிற மாநிலத்தைச் சார்ந்த மக்கள் வெவ்வேறு தாய்மொழியைக் கொண்டிருந்தால், அவரவர் தாய்மொழியை அவரவர் கற்க தேவையான வாய்ப்புகள், வசதிகள் செய்து தரப்படும் என்பதையும் தெளிவுபட கூறப்பட்டுள்ளது.
* மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் முதல் ஆண்டு வாரியத் தேர்வு இல்லாமல், மேல் நிலைப்பள்ளி படிப்பில் இரண்டாம் ஆண்டு மட்டுமே வாரியத் தேர்வு இருக்கும் என்பதும், வளர்ந்த குழந்தைகளின் உளவியலை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள நியாயமான நடவடிக்கையாக உள்ளது.
* ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல், பயிற்சி, குழந்தை நேயக் கற்றல் சூழல், மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் அனைத்தும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியைத் தருவதாக பள்ளிக் கல்வி செயல்பாடுகள் இருக்கும்.
* மாதிரிப் பள்ளிகள் (Model Schools) மற்றும் தகைசால் (VETRI) பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளன.
* தமிழ்நாட்டின் வரலாற்று சாதனைகளான அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியில் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வலுவான நலத்திட்டங்கள் ஆகியவற்றை மறுசீரமைப்பதை கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. அனைத்தையும் உள்ளடக்கிய சமச்சீரான மற்றும் மீட்புத் தன்மையுள்ள ஒரு கல்வி முறை மூலம் ஒவ்வொரு குழந்தையின் திறனையும் வளர்ப்பதை தொலை நோக்குப் பார்வையை இது வெளிப்படுத்துகிறது.
* கலைத் திட்டம், கல்வியியல் சீர்திருத்தம் மற்றும் மொழிக் கொள்கை என்பதில், பள்ளிக் கலைத் திட்டம், பாடங்களை மனப்பாடம் செய்வதை குறைப்பது, கலை, விளையாட்டு மற்றும் செயல்திட்டம் அடிப்படையிலான கற்றல் போன்ற பன்முகக் கற்றல், கற்பித்தல் அணுகுமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு தமிழ் மொழிக் கற்றல் சட்டம் அனுமதிக்கும் பன்மொழிக் கல்வி, சமச்சீரான இருமொழிக் கொள்கை, கருத்தியல் தெளிவு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிக்க, குழந்தைப் பருவ-தாய்ெமாழி வழிக் கற்பித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
* 21ம் நூற்றாண்டின் திறன்கள், எதிர்காலத் திறன்கள் மற்றும் எண்மக் கல்வியறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து எதிர்காலத் திட்டங்களை கட்டமைப்பதற்கான கூர் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், நிதியியல் சார் கல்வியறிவு, எண்மத் திறன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உலகளாவிய குடியுரிமை ஆகிவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறியீட்டு முறை, ரோபோட்டிக் சிஸ்டம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான TN-SPARK திட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது.
* கல்வித் தொலைக்காட்சி, மணற்கேணி செயலி போன்ற நேரடி மற்றும் இணைய வழிக் கற்றல் முறையை விரிவுபடுத்தும் முறைகள் கொண்டவற்றை கோடிட்டு காட்டுகிறது.
* மதிப்பீட்டு முறைகள் தண்டனைக்குரியதாக இல்லாமல் கற்றலுக்கு ஆதரவாகவும், குறையறிதலுக்காகவும் இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளில் மாணவர்களை நிறுத்தி வைத்தல் என்பதை மறுக்கிறது. அதற்கு பதிலாக இணைப்பு பயிற்சிகள், கற்றல் விளைவுகளின் கண்காணிப்பு, பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் மற்றும் முதல் தலைமுறை கற்போருக்கான தனித்துவமான ஆதரவு ஆகியவற்றுக்கான முறைகளை அறிமுகம் செய்கிறது.
* ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் பணிசார் மேம்பாடுகளில் பழங்குடியின, மாலைப்பாங்கான, பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சூழல்சார் பயிற்சியும், பள்ளி அளவிலான சவால்களை சந்திப்பதற்கான கூடுதல் உதவி அளிப்பதை வலியுறுத்துகிறது.
* பாதுகாப்பு, உள்ளடங்கிய பள்ளிகள் மற்றும் முழுமையான குழந்தை மேம்பாடு என்பதில் உடல் ரீதியான பாதுகாப்பு, மனநல வளர்ச்சி மற்றும் சமூகம்சார் உள்ளடங்கிய பள்ளிகளை உருவாக்குவதற்கான ஒரு விரிவான பார்வையை இந்த கல்விக் கொள்கை முன்வைக்கிறது.
* எதிர்கால பள்ளிகளுக்கான நெகிழ்வுத் தன்மை மற்றும் நிலையான உள்கட்டமைப்பில், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் மூலம் பள்ளிகளை நவீனமயமாக்கும் மாநிலத் திட்டம் குறித்தும் கல்விக்கொள்கை விவரிக்கிறது. அதன்படி பசுமை வளாகங்கள், மழை நீர் சேகரிப்பு, சூரிய சக்தி போன்ற நிலைத்தன்மைக்கான அம்சங்களை அறிமுகம் செய்கிறது. மாதிரப் பள்ளிகள், ெவற்றிப் பள்ளிகள் முன்னெடுப்புகளும் இடம்பெற்றுள்ளன.
* சமூக ஈடுபாடு மற்றும் நிர்வாகப் பரவலாக்கலில், பள்ளி மேலாண்மைக்குழுக்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) கூட்டாண்மைகள், முன்னாள் மாணவர் வலையமைப்புகள் ஆகிவை நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி என்கிற முன்முயற்சிகள் குறித்தும் பேசுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த கல்விக் கொள்கை அடிப்படைக் கற்றல், கலைத் திட்டம், கற்பித்தல் முறைகள், ஆசிரியர் மேம்பாடு, மதிப்பீடு, எண்ம ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயப் பங்கேற்பு ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை கோடிட்டு காட்டுகிறது.
கற்போர் ஒவ்வொருவரின் முழுத் திறனையும் வளர்க்கும் பாதுகாப்பான, எழுச்சியுறு இடங்களாகப் பள்ளிகளை மாற்றத் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கண்ணியத்துடன் கற்றுக் கொள்ளவும், தன்னம்பிக்கையுடன் வளரவும், விரைந்த மாறுதலுக்கு உள்ளாவதும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுமான உலகில் வளம் பெறவும் தேவையான கல்வியை உறுதி செய்யும் அர்ப்பணிப்பே மாநிலக் கல்விக் கொள்கையின் மையப்குதியாக இருக்கிறது.
* சாதி, பாலினம், புவியியல் அமைவிடம் மற்றும் திறமை ஆகியவற்றில் கல்விக்கான சமத்துவத்தை உறுதி செய்வதற்கு தமிழ்நாட்டின் சமூக நீதி மரபில் வேரூன்றிய, வலுவான செயல்திட்டமும் கல்விக் கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
* அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு என்ற அடிப்படையின் கீழ், மாநிலத்தின் மிக முக்கியமான கல்வி முன்னுரிமையாக நிலை நிறுத்துகிறது. குறிப்பாக, கிராமப்புற, பழங்குடியின மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் ஆரம்பகால கற்றல் குறைபாட்டை நீக்குவதற்கான ஒரு காலக்கெடுவுடன் கூடிய வழிமுறைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
