‘தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம்’ எடப்பாடி, நயினாருக்கு எதிராக கண்டன போஸ்டர்

சிவகங்கை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜ கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், இந்த கூட்டணியை ‘பொருந்தா கூட்டணி’ என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், சிவகங்கை நகர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரில், மேலே உள்ளவர்கள் தான் தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டத்தின் முகங்கள். 10.5 இட ஒதுக்கீடு சதிகாரர், எடப்பாடிக்கு உடந்தையாக இருக்கும் இன துரோகி நயினார் நாகேந்திரன். தப்பு கணக்கு போடும் எடப்பாடி அணி மற்றும் பிஜேபி கூட்டணியை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதிகளில் படுதோல்வி அடையச் செய்வோம்.

குறிப்பு: 2 செல்போன் வைத்திருக்கும் நயினார் நாகேந்திரனை முதல் செல்போன் தொழிலுக்கும், இரண்டாவது செல்போன் அரசியலுக்கும் பயன்படுத்தி வந்ததால் தான் அதிமுகவில் இருக்கும்போது ஜெயலலிதாவால், இவரிடம் இருந்த மாநில புரட்சி தலைவி பேரவை செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இவண் விகேஎஸ், ஓபிஎஸ், டிடிவி கூட்டமைப்பு, தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டம் என எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் சிவகங்கை நகர் பகுதி, அரசு பழைய மருத்துவமனை சுவர் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: