×

முதலீடுகளுக்கான முதல் முகவரி ஆகியுள்ளது தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார சாதனையை விரைவில் தமிழ்நாடு எட்டும்: முதலீடுகளுக்காக வாங்கும் கடன்கள் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது, அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: முதலீடுகளுக்கான முதல் முகவரி ஆகியுள்ளது தமிழ்நாடு. விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி தமிழகம் சாதனை படைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சென்னை அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, சீரான கொள்கை நெறி வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று, மணிமகுடத்தில் மற்றொரு பொறித்த வைரக்கல்லாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.

ஏற்கனவே நாம் சொல்லியிருக்கக்கூடிய 9.69 சதவீதம் என்கிற அந்த ஜிஎஸ்டிபி உடைய இலக்கையும் தாண்டி, இன்றைக்கு 11.8 சதவீதம் பொருளாதார குறியீடுகள் உயர்ந்து இருக்கின்றன. ஏறத்தாழ 12 சதவீதம் நெருங்கி வரக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறோம். நம்முடைய சாதனையை நாம் தான் முறியடிக்க முடியும் என்கிற வகையில் 9.69 சதவீதம் என்ற ஒற்றை இலக்கத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை இன்றைக்கு இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிற மகத்தான சாதனையை முதல்வர் ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

இந்த இரட்டை இலக்கத்திலே பொருளாதார ஆட்சியை உருவாக்குவது, உண்மையான விதிமுறைகளில் வளர்ச்சி பெறுவது என்பது கலைஞர் ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது 13 சதவீத வளர்ச்சியை நாம் பெற்று இருந்தோம். அதன்பின் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்று இருக்கிறது. இந்திய அளவில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு தான் இந்த இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

எனவே இந்த வளர்ச்சி என்பது 2030ம் ஆண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்பதற்கு திடமான வழியை வகுத்து தந்துள்ளது. முதல்வரின் சீரிய முயற்சிகளிலான தொழில் முதலீடுகள், தொழில் முதலீடுகள் மூலம் கிடைத்த வேலைவாய்ப்புகள் என அனைத்தின் காரணமாக இந்த பொருளாதார வளர்ச்சி அமைந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான முழு சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கி இருக்கிறோம். நாம் முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு என்கிற அளவில் முதல்வரின் முயற்சியின் காரணமாக ஈர்க்கப்பட்டு இருக்கக்கூடிய ஏராளமான முதலீடுகளே இந்த பெருமையை தந்து இருக்கிறது.

நிதி நிலைமையை நாம் சரியாகக் கையாண்டு இருக்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி இருக்கிறோம். கடன் வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால் வரைமுறைகளுக்கு உட்பட்டு முதலீடுகளுக்காக நாம் வாங்குகின்ற கடன்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்பதை காட்டுகின்றது. ஒன்றிய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், நமது முதல்வரின் கூரிய நோக்கிலான வழிகாட்டுதல் மூலம் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ஒன்றிய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், நமது முதல்வரின் கூரிய நோக்கிலான வழிகாட்டுதல் மூலம் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.

Tags : Tamil Nadu ,Minister ,Gold South Rasu ,Chennai ,Gold South Narasu ,Finance Minister ,Thangam Tennarasu ,Chennai Intuwalaya ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Manimaguda ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...