ராஜபாளையம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் இருந்து ராஜபாளையம் வந்தார். அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 2 நாள் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு அவர் தங்கியிருந்த ஓட்டலில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்கள், நூற்பாலை தொழிலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலநிலை மாற்றத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் சோர்வு, தொண்டை வலி ஏற்பட்டுள்ளதால், இன்று காலை ஓட்டலில் நடைபெற இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜபாளையம் பழைய பஸ் பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
