போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரின் சோதனையில் ரூ.8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ நகைகள் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

சென்னை: சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி உள்ளிட்ட போலீசார், திருவள்ளூர் அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏலாவூர் சோதனைச்சாவடி பகுதியில், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்திய போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆம்னி பஸ்சில் கேட்பாரற்று இருந்த 3 பைகளை சோதனை செய்தனர். அந்த பைகளில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அதனைக் கொண்டு வந்த சேலம் அம்மாபேட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (38) ஆகிய இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் ஓமலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள கோயம்பத்தூர் ஜுவல்லரி கடையில் வேலை பார்த்து வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் ஆர்டர் கொடுப்பதற்காக, சேலம் நகைக்கடையில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு தங்க நகைகளின் மாடல்களை எடுத்துச் சென்றனர்.

அந்த வகையில் 14.5 கிலோ தங்க நகைகளின் பல்வேறு மாடல்களை காண்பித்து ஆர்டர் கொடுத்துள்ளனர். பின்னர், மாடல் காண்பித்த தங்க நகைகளை எடுத்து கொண்டு மீண்டும் சேலம் செல்வதற்காக அவர்கள் சென்னை வந்துள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை அவர்கள் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ரூ.8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நகைகளை வியாசர்பாடி போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வருமான வரித்துறை உதவி கமிஷனர் பாலச்சந்தர், வியாசர்பாடி போதைபொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில்வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். நகைகளும் அங்கு கொண்டுசெல்லப்பட்டது. விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த காரணத்தினால் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப்பிரிவு போலீசார் அங்கிருந்து வரும் ஆம்னி பேருந்துகள் மற்றும் லாரிகளில் தொடர் சோதனை செய்து வருகின்றனர். அவ்வாறு செய்த சோதனையில் தற்போது ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரின் சோதனையில் ரூ.8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ நகைகள் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: