ரூ.90 லட்சம் மோசடி; வங்கி மேலாளர் கைது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட லம்பாடி காலனியில் ஷகிலாபானு (30) என்பவர் 9 மகளிர் சுய உதவிக்குழுவை ஏற்படுத்தி வங்கியில் பணம் செலுத்துதல், கடன் எடுத்து கொடுத்தல் போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில், லோன் புரோக்கர் ஹயாத் நகரை சேர்ந்த முகமது ரபிக் (45) என்பவர், ஷகிலாபானுவை அணுகி, ஆசிரியர் நகரில் உள்ள தனியார் வங்கியில் 9 குழுவினருக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் லோன் வாங்கித் தருவதாகவும், மாதம் ரூ.200 கட்டினால் போதும் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதற்காக 90 பேரின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார். பின்னர், வங்கியின் மேலாளரான கோவை கணபதி நகரை சேர்ந்த கவுதம்(33) உடந்தையோடு மோசடியாக ரூ.90 லட்சம்(ஒரு குழுவுக்கு ஒரு லட்சம் வீதம்) கடன் பெற்றுள்ளனர். இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு, தலா ரூ.90 ஆயிரத்தையும் இருவரும் கையாடல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தும்படி கடந்த வாரம் நோட்டீஸ் சென்றுள்ளது. அதிர்ச்சி அடைந்த 9 சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களும் நேற்று முன்தினம் சமாதான பேச்சுக்காக லோன் புரோக்கர் முகமது ரபிக் மற்றும் வங்கி மேலாளர் கவுதம் ஆகிய இருவரையும் வரவழைத்து, ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் கவுதம், லோன் புரோக்கர் முகமது ரபிக் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

The post ரூ.90 லட்சம் மோசடி; வங்கி மேலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: