கொடுத்த கடனை வசூலிக்க பயங்கர ஆயுதங்களுடன் வந்த அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது

*மாநகர போலீசார் அதிரடி

திருச்சி : திருச்சி மாநகர பகுதியில் கடன் வசூலிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் வந்த அதிமுக நிர்வாகி உட்பட 8 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அறிவுரையின்படி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விரோதமாக ஆயுதங்களுடன் சுற்றித்திரிபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி, நேரு நகரை சேர்ந்தவர் கணேசன் (60). இவர், புதுக்கோட்டையில் அபிராமி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வரும் இவருக்கு, திருச்சி கருமண்டபம் ஆசாத்நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கணேசனிடம் பள்ளி ஒன்று கட்டவுள்ளதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி ₹35.65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ₹5 லட்சத்தை மட்டும் திருப்பி தந்தவர், மீதித்தொகையை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணேசன் கடந்த வாரம், திருச்சி ஓலையூரில் வசிக்கும் தன் மைத்துனர் முத்தையாவை அணுகி இதுபற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் வெங்கடேசிடம் பணத்தை கேட்டுள்ளனர். அவர் பணம் தராமல் சாக்குபோக்கு கூறியுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக வெங்கடேசனை தாக்குவதற்காக ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கண்டோன்மெண்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலக சாலையில் இருக்கும் ஒரு ஓட்டல் முன்பு காத்திருந்தனர். வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பலை கண்ட அப்பகுதி மக்கள் செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மூன்று கார்களுடன் நின்றவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கார்களை சோதனையிட்டபோது அதிமுக இளைஞர் பாசறை திருச்சி மாவட்ட தலைவரான பீமநகர் கரண் (22) என்பவருக்கு சொந்தமான காரில் நீண்ட பட்டாக்கத்தி ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து மூன்று கார்கள் மற்றும் பட்டாக்கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆயுதங்களுடன் நின்றிருந்த திருச்சி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை தலைவர் பீமநகர் கரண் உட்பட, கே.கே.நகர் சிபிராம் (19), ஓலையூரை சேர்ந்த தினேஷ் (33), கல்யாணசுந்தரபுரம் சீலப்ப நாயக்கர் தெருவை சேர்ந்த அருண்குமார் (26), கோட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில், இது தொடர்பாக கே.கே. நகர் இந்திரா நகரை சேர்ந்த பார்த்திபன் (30), ஓலையூரை சேர்ந்த குமார்(எ)விஜயகுமார் (40), புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த முத்தையா (45) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடன் வசூலிப்பதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

The post கொடுத்த கடனை வசூலிக்க பயங்கர ஆயுதங்களுடன் வந்த அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: