8 மாதங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காத மனுவை என்னிடமே திருப்பி வழங்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மனு

வேலூர் : 8 மாதங்களுக்கு மேலாகியும் தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அதை என்னிடமே திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அருகே உள்ள கே.வலசை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(85), விவசாயி. இவர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். ஆனால் தேர்தல் காரணமாக மனுநீதி நாள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை செலுத்தினார். அந்த மனுவில் விவசாயி கூறியிருப்பதாவது: எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் எனது 2 மகன்களுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்து விட்டேன். அதன்பிறகு மகன்கள் எங்களை கவனிக்கவில்லை. நானும் எனது மனைவியும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம். எனது மகன்களுக்கு கொடுத்த பாகப்பிரிவினை சொத்தை ரத்து செய்யுமாறு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மனு அளித்தேன். ஆனால் அந்த மனுமீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் மனுவை வைத்திருப்பதால் என்ன லாபம். எனவே உடனடியாக நான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் நான் கொடுத்த மனுவை, என்னிடமே திருப்பி கொடுத்து விடுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்திருப்பதாக சின்னசாமி தெரிவித்தார்.நடவடிக்கை எடுக்காத மனுவை திருப்பி கேட்டு முதியவர் மீண்டும் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

The post 8 மாதங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காத மனுவை என்னிடமே திருப்பி வழங்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மனு appeared first on Dinakaran.

Related Stories: