விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்: 4 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்த நிலை மாறி, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனக்காக வருகின்றனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதியது. அதன்படி, அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ரூ.50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசன வரிசை வெளிப்பிரகாரம் வரை நீண்டிருந்தது.

எனவே, தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் லட்டு வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்ததால், மாடவீதியில் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை. சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே, காந்தி நகர் திறந்தவெளி மைதானம் மற்றும் அண்ணா நுழைவாயில் அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 2.28 மணிக்கு தொடங்கியதால், நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதனால், நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதனால், வழக்கத்தைவிட கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

 

The post விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்: 4 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு appeared first on Dinakaran.

Related Stories: