தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்டப்பாலம் எப்படி அமைய உள்ளது?.. 3d அனிமேஷன் வெளியீடு..!

சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்டப்பாலம் எப்படி அமைய உள்ளது 3d அனிமேஷன் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழித்தட உயர்மட்ட பாலத்தை ரூ.621 கோடியில் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா சாலை. ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதியான அண்ணா சாலையில், திருவல்லிக்கேணி சந்திப்பு முதல் கிண்டி வரையிலான பகுதியில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வரும் சாலைகள் இணைகின்றன.

இதனால், அந்த சாலை சந்திப்புகளில் எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும். அத்துடன், சாலையை கடந்து மறுபகுதிக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். ‘‘சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை உயர்மட்டச்சாலை அமைக்கப்படும். இதனால் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்’’

இந்த உயர்மட்ட மேம்பாலம், சென்னை மாநகர சாலை பிரிவின் பராமரிப்பின் கீழ் வரும். நகரில் ஜிஎஸ்டி சாலை, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இருந்து தென் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் தற்போதும் பல தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் நிறைந்துள்ளன. நகரமயமாக்கம் மற்றும் தொழில்மயமாக்கம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால், மாநகரில் வாகன நெருக்கடி மிகுந்த சிக்கலாக மாறியுள்ளது. வாகனங்களின் பயன்பாடும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தாடண்டர் நகர், சிஐடி நகர், நந்தனம், செனடாப் சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்புகளில் 3 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல்களை கடந்து செல்வதற்கான தாமதம் என்பது சராசரியாக 16 நிமிடமாக உள்ளது. இந்த சாலைப்பகுதியில் வாகன அடர்த்தி நிர்ணயிக்கப்பட்ட 10000 என்பதை தாண்டி தற்போது 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தினசரி இந்த சாலையில் சராசரியாக 2,37,686 ஆக உள்ளது. எனவே, தற்போதைய வாகன வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்த சாலையை கூடுதல் வாகனங்களை தாங்கும் அளவுக்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் ஆகியவற்றுடன் கூடுதலாக திறன் மிக்க பெரிய அளவிலான போ்ககுவரத்து திட்டத்தை உருவாக்கும் நோக்கில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கிமீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்ட மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொதுமேலாளரின் அனுமதி பெறப்பட்டு, தரைக்கு அடியில் செல்லும் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தை கருத்தில் கொண்டு, ரூ.500 கோடிக்கான காப்பீடும் மேற்கொள்ளப்படுகிறது.

The post தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்டப்பாலம் எப்படி அமைய உள்ளது?.. 3d அனிமேஷன் வெளியீடு..! appeared first on Dinakaran.

Related Stories: