முதல் அரையாண்டின் சொத்து வரி செலுத்த ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் முதல் அரையாண்டின் சொத்து வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியாக ெசன்னை மாநகராட்சி திகழ்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் பல ஆயிரம் கட்டிடங்கள், வீடுகள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக சொத்து வரி இருக்கிறது. மாநகரில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதம்தோறும் ஊதியம், ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சொத்து வரி வருவாய் முக்கியமானதாக உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர மேலும் பல திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் அதேநேரம், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் இருந்தால் திட்ட பணிகளை வேகமாக முடிக்க முடியும் என்பதால் இதில் அதிக கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, வரி பாக்கியை முறையாக செலுத்தாமல் இருக்கும் நபர்களிடம் இருந்து, வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. பெருந்தொகையை செலுத்தாமல் வரி பாக்கி வைத்துள்ளவர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.

சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த முதல் அரையாண்டின் வரியை ஏப்ரல் 15ம் தேதிக்குள்ளும், 2ம் அரையாண்டின் வரியை அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வசூலிக்க வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர் மீது சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போதுள்ள கட்டிடங்களில் கூடுதலாக கட்டினாலும், அதில் மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், கட்டிடத்தின் குடியிருப்புத் தன்மை மற்றும் உபயோகத் தன்மை மாறினாலும் சென்னை மாநகராட்சிக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு அரையாண்டுக்கும் தலா ரூ.750 கோடி என ரூ.1,500 கோடி வரை வசூலிக்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால் அவகாசம் அளிக்கப்பட்ட நாட்களுக்கு பின் சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு வந்தது. இதில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், சொத்து வரியினை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகைகளான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு முகாம் நடத்தி, சொத்து வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில், முதல் அரையாண்டின் சொத்து வரியை இதுவரை செலுத்த தவறியவர்களுக்கு, ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 15ம் தேதிக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டது. அவ்வாறு செலுத்த தவறியவர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அவ்வாறு சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர்கள். எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி ஊக்க தொகையினை பெறுவதுடன், மாநகராட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதல் அரையாண்டின் சொத்து வரி செலுத்த ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: