மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி: அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி

புதுடெல்லி: அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. அரியானாவில் உள்ள 90 பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியே போடடியிடுகின்றன. அரியானா பேரவை தேர்தலையொட்டி காங்கிரசின் 7 வாக்குறுதிகளை அக்கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால், அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்புகளை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று வௌியிட்டார்.

அதன்படி, அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும், அரியானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் திட்டத்தின்கீழ் ரூ.500 மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள், 18 முதல் 60 வயதுக்குள்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை, சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த முதியோர், மாற்று திறனாளிகள், கணவரை இழந்த பெண்களுக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் தரப்படும்,

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்படும், கிரீமிலேயரின் வருமான உச்ச வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும், வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்” என்ற 7 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். அதனால்தான் இதற்கு 7 வாக்குறுதிகள், உறுதியான நோக்கங்கள்” என பெயரிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

The post மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி: அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: