3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி சென்னையில் இருந்து கூடுதலாக 500 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் என தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பேருந்து பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால், வெளியூர் பயணம் அதிகரித்தது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

கோடை விடுமுறை, பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் பேருந்துகளில் கூட்டம் அதிகரிக்கிறது. நாளை (14ம் தேதி) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது, அதைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும். தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் கூடுதலாக 1000 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது. நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதால் இன்று (13ம் தேதி) வியாழக்கிழமை 500 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல ரம்ஜான் பண்டிகை 22ம் தேதி வருவதால் 21ம் தேதி வெள்ளிக்கிழமை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த வாரம் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோல தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜானையொட்டி விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் வீதம் இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி சென்னையில் இருந்து கூடுதலாக 500 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: