பாதுகாப்பு பிரிவு 1.70 லட்சம் உள்பட ரயில்வேயில் 2.74 லட்சம் காலியிடங்கள்: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: ரயில்வேயில் 2.74 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் இந்த மாத நிலவரப்படி காலியாக உள்ளன. அவற்றில் 1.70 லட்சத்துக்கும் அதிகமானவை பாதுகாப்புப் பிரிவில் மட்டும் இருப்பதாக ஆர்டிஐ கேள்வியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந்திர சேகர் கவுர் என்பவர் ரயில்வேயில் தற்போதைய நிலையில் உள்ள காலி பணியிடம் குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சகம் கொடுத்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

ரயில்வேயில் 1.6.2023 நிலவரப்படி குரூப் சி பிரிவில் 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் பாதுகாப்பு பிரிவில் 1,77,924 காலியிடங்கள் உள்ளடங்கும். பாதுகாப்பு பிரிவில், 9.82 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளன. அதில் 8.04 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2022 டிசம்பரில் ரயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இப்போது 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபருக்குள் 1.52 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயித்துள்ள ரயில்வே, ஏற்கனவே 1.38 லட்சம் பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 90,000 பேர் சேர்ந்துள்ளனர். இவற்றில் 90 சதவீத பணியிடங்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவைஆகும் என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறியுள்ளார்.

 

The post பாதுகாப்பு பிரிவு 1.70 லட்சம் உள்பட ரயில்வேயில் 2.74 லட்சம் காலியிடங்கள்: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: