காஞ்சிபுரத்தில் நடந்த மருத்துவ முகாமில் 250 முதியோர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி: மாநகராட்சி மேயர் வழங்கினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த கண் பரிசோதனை மருத்துவ முகாமில், 250க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் வழங்கினர். காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் பம்மல் சங்கர நேத்ராலாயா இணைந்து, காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 8 நாட்கள் கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் கஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். இதில், மருத்துவ குழுவினர்கள், 1,300க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கண்களை பரிசோதனை செய்தனர்.

இதில், பங்கு பெற்ற அனைவருக்கும் உணவு, தங்குமிடம், அறுவை சிகிச்சை கட்டணம் என அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டது. பின்னர், இப்பள்ளி வளாகத்திலேயே மருத்துவமனை சிறப்பு அறுவை சிகிச்சை வாகனத்திலேயே 150 நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 245 நபர்களை மேல் கிசிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகள், சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டது.இந்த கண் சிகிச்சை மருத்துவ முகாமின் நிறைவு விழா, பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் உள்ள அருண்ஆனந்த் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு கிட்ட மற்றும் தூரபார்வை குறைபாடு உள்ள 250க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு இலவசமாக சக்தி வாய்ந்த மூக்கு கண்ணாடியை வழங்கினார். விழாவில், ரோட்டரி கிளப் கிழக்கு தலைவர் முருகேஷ், செயலாளர் கமலேஷ், பொருளாளர் பாஸ்கரன், பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் அருண்குமார், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் பிரபு (எ) பச்சையப்பன், வர்த்தக சங்கத்தலைவர் ராமகிருஷ்ணன், ஹோட்டல்கள் சங்க நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் நடந்த மருத்துவ முகாமில் 250 முதியோர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி: மாநகராட்சி மேயர் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: