தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 1090 மாணவர்கள் பயன்

ஊட்டி : அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் நேற்று துவக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 14 கல்லூரிகளில் பயிலும் 1090 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேரும் மாணவிகளுக்கு நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மறு சீரமைக்கப்பட்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டமாக (புதுமை பெண் திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வழக்கமாக சேரும் மாணவிகளை விட கடந்த ஆண்டில் கூடுதலாக மாணவிகள் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை துவக்கி வைக்கப்பட்ட கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. சுமார் 21 கல்லூரிகளை சார்ந்த 1037 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் ரூ.10 லட்சத்து 37 ஆயிரம் என மூன்று கட்டங்களில் ரூ.2 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கலை கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்ட துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் திட்டத்தை துவக்கி வைத்து 25 மாணவர்களுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பற்று அட்டைகள் வழங்கப்பட்டு ரூ.1000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது. இது மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 14 கல்லூரிகளில் பயிலும் 1090 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முதற்கட்டமாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 1090 மாணவர்களுக்கு ரூ.1000 வீதம் ரூ.10 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முதல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்கள் வேறு எந்த உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்திலும் பயன்பெறலாம்.

இனிவரும் காலங்களிலும் தகுதியான மாணவர்கள் தங்களது கல்லூரிகள் மூலம் யுஎம்ஐஎஸ்., தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதல்வரின் உரை நேரலை செய்யப்பட்டது. இதில் கூடுதல் ஆட்சியர் கௌசிக், ஊட்டி அரசு கல்லூரி முதல்வர் ராமலட்சுமி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர்: இதே போல கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூர் வட்டாச்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து தமிழ் புதல்வன் திட்டம் குறித்த விளக்க உரையாற்றினார்.தொடர்ந்து தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 24 மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூபாய் ஆயிரத்திற்கான ஆணைகளை வழங்கினார். முன்னதாக தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஷாஜி எம் ஜார்ஜ் வரவேற்றார்.முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.

பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி மைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகையில்: அரசு பல்வேறு நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதிலும் கல்விக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தும் திட்டமாக உள்ளது. இடை நிற்றல் இல்லாமல் மாணவர்கள் நல்லமுறையில் படித்து வாழ்கையில் முன்னேற வேண்டும்.

உலக பழங்குடியினர் தினத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தது மிகவும் சிறப்பு என்றார். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் 32 மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்ஐ வாசுதேவன் மற்றும் தொழிற்பயிற்சி மைய பயிற்றுனர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 1090 மாணவர்கள் பயன் appeared first on Dinakaran.

Related Stories: