குடியாத்தம் அருகே 10 மாதத்தில் 2 மடங்கு பணம் தருவதாக நண்டு வளர்ப்பு தொழிலில் முதலீடு செய்து 52 பேரிடம் ₹1.09 கோடி மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், பிப்.25:குடியாத்தம் அருகே 52 பேரிடம் நண்டு வளர்ப்பு தொழிலில் பணத்தை முதலீடு செய்து 2 மடங்கு அதிகமாக்கி தருவதாக ₹1.09 கோடி மோசடி செய்ததாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ்(37). இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில் தலைமுடி வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறேன்.எனக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த சம்பத் மற்றும் ரேணுகாதேவி ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் தங்களது ஒரு கம்பெனியை கூறி அதில் பணத்தை முதலீடு செய்தால் 10 மாதத்தில் பணத்தை 2 மடங்கு அதிகமாக்கி தருகிறோம் என்று கூறினர்.எனது உறவினர் எனக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அந்த கம்பெனியில் சேர்த்துவிட்டு பல கோடி பணம் முதலீடு செய்துள்ளார். இதனால் எனக்கு அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இந்த கம்பெனி தொடர்பாக சென்னையில் நட்சத்திர ஓட்டலில் மீட்டிங் நடைபெற்றது.

அப்போது கம்பெனியின் இயக்குனர் லஷ்மணன், ஆதித்யகுமார், சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பணத்தை முதலீடு செய்தால் 2 மடங்கு அதிகமாக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். மேலும் கடந்த ஆண்டு வேலூரில் உள்ள ஓட்டலில் மீட்டிங் நடக்கிறது என்று அழைப்பு விடுத்தார்கள். அப்போது புதிய கம்பெனி தொடங்கியுள்ளோம்.இதில் நண்டு வளர்ப்பு தொழில் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, முதலீட்டாளர்களின் பணத்தை, முதலீடு செய்த தேதியிலிருந்து 10 மாதத்தில், 2 மடங்கு அதிகமாக தருகிறோம் என்று கூறினர். நானும் அதனை நம்பி வங்கி கணக்கு மூலமாக 6 தவணையாக ₹13 லட்சம் பணத்தை செலுத்தினேன். பின்னர் எனக்கு கீழ் எனது உறவினர்கள் 51 பேரை சேர்த்தேன். அவர்கள் மொத்தம் ₹87.90லட்சம் பணத்தை ரொக்கமாக செலுத்தினேன்.பின்னர் முதிர்வு காலம் முடிந்தும் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. பலமுறைகேட்டும் சரியான பதில் இல்லை. எனவே எனது பணம் உட்பட மொத்தம் 52 பேரின் பணம் ₹1.09 கோடியை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நண்டு வளர்ப்பு தொழிலில் முதலீடு செய்த பணத்தை 2 மடங்கு அதிகமாக்கி தருவதாக கூறி 486 பேரிடம் ₹3.79 கோடி மோசடி செய்ததாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: