கூடுதல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி லஞ்சம் பெறாமல் நெல் கொள்முதல் கீழ்பவானி விவசாயிகள் வலியுறுத்தல்

காங்கயம்,ஜன.28:  கீழ்பவானிப் பாசனப்பகுதியில் கூடுதலான நெல் கொள்முதல் ஏற்படுத்தி லஞ்சம் பெறாமல் நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி கூறி இருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட்  16ம் தேதி நெல் பயிரிட கீழ்பவானிப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளது. அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதலான இயந்திரங்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில்  ஒருசில இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பரவலாக பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதலுக்குக் கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். குவின்டால் 1க்கு சன்னரக நெல் ரூ.1905 ஆகவும் மோட்டா ரகத்திற்கு ரூ.1865ஆகவும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. உற்பத்தி செலவு கூடியிருக்கும் இந்த கால கட்டத்தில் அரசின் விலை நிர்ணயம் குறைவானதே ஆகும். கொள்முதலுக்குக் கொண்டு வரப்படும் 40 கிலோ எடை கொண்ட சிப்பம் ஒன்றுக்கு லஞ்சமாக ரூ.40 பெறப்படுவது நடைமுறையாகிப் போனது.லஞ்சம் கொடுக்காமல் கொள்முதல் எங்கும் நடப்பதில்லை. இவ்வாறான செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. நெல் அறுவடை செய்யும் விவசாயிகளுடைய அறியாமையை லஞ்சமாக அதிகாரிகளும் இடைத்தரகர்களும் அறுவடை செய்வது ஒரு விவசாய விரோதப் போக்கே ஆகும். இதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. எனவே, இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் லஞ்சத்திற்கு இடம் கொடுக்காமல் கொள்முதல் நடக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு. என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: