திருச்சுழியில் கோயில் வளாகத்தில் குப்பை குவிப்பு

திருச்சுழி, டிச. 4: திருச்சுழியில் உள்ள பூமிநாதர் கோயில் வளாகத்தில் குப்பைகளை குவிப்பதால், தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. திருச்சுழியில் பூமிநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் தரிசனம் செய்ய, நகர் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் அதிகமாக வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு இருப்பதால், அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். இது தவிர கோயிலில் தினமும் பூஜை நடக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கோயில் வளாகத்திலே பாலித்தீன் பைகள் உள்பட கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். கோயில் கழிவுகளையும் இங்கேயே குழிதோண்டி கொட்டுகின்றனர். இது தவிர சிலர் கோயிலில் அமர்ந்து சாப்பிடுவர். இந்த கழிவுகளையும் கோயில் வளாகத்திற்குள் கொட்டுகின்றனர்.இதனால், வெளியூர் பக்தர்கள் முகம்சுளிக்கின்றனர். மன நிம்மதிக்காக கோயிலுக்கு வந்தால், இங்குள்ள குப்பையை பார்த்தவுடன் இருக்கிற நிம்மதியும் போய்விடுகிறது என்கின்றனர். தற்போது மழை பெய்வதால் குப்பைகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் குப்பையை கொட்டாமல் சுகாதாரத்தை காக்க வேண்டும். கோயில் நிர்வாகம் தினமும் குப்பையை அகற்றிட முன்வர வேண்டும்.இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த ராமர் கூறுகையில்: இங்கு தரிசனம் செய்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வந்துள்ளோம். மனநிம்மதியை தேடி கோயிலுக்கு வந்தால் தொற்று நோயை தேடி வந்தது போல் உள்ளது. கோயில் உள்ளே நுழைந்தவுடனே குப்பை கிடங்கு வரவேற்கிறது. குப்பையை வளாகத்தில் கொட்டப்படாமல் வெளியே கொட்டுவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: