பாலக்காடு மாவட்டதில் வாய்க்கால்களில் உடைப்பு

பாலக்காடு, ஆக.11:  பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பலான வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி, உபரி நீர் வாய்க்கால்களில் வெளியேறி வருகின்றன. சித்தூர் தாலுகா விளையோடி, பாறக்களம், ஆலம்பள்ளம், அணக்கப்பாடம் உள்ளிட்ட இடங்களில் குன்னம்பிடாரி ஏரி, கம்பாலத்தரை ஏரி நிரம்பி உபரிநீர் வாய்க்கால்களில் வெளியேறி வருகின்றன. சில இடங்களில் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகில் உள்ள வயல்களில் நிரம்பியுள்ளன. இதனால் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர் நீரில் மூழ்கின.  பாலக்காடு அடுத்த கஞ்சிக்கோடு சாலையில் பாறை பகுதியில் குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு 20 ஏக்கர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள காய்கறி தோட்டங்களில் பயிர்கள் மழை நீரில் அடித்து செலலப்பட்டன. கொடும்பு பொல்லாபுள்ளி சாலையிலுள்ள அணக்கப்பாடம் வாய்க்காலில் மழைவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாய்காலில் உள்ள 12 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லிங்கல் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.பாலக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

Related Stories: