திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் காத்திருக்கும் நோயாளிகள்

திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். ஆனால் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் ஏற்

பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் இன்றி தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.  இதில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் கடந்த ஒரு மாதமாக பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தொடர் சளி என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் 2000க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இவர்கள் புறநோயாளிகள் சீட்டு பெற்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். நேற்று காலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், நோயாளிகள் நீண்டநேரம் கால்கடுக்க காத்திருந்தனர். சில நோயாளிகள் நிற்கமுடியாமல் மயங்கும் நிலைக்கு ஆளாகினர். இம்மருத்துவமனையில், புறநோயாளிகள் சீட்டு பெற, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற, மாத்திரைகள் வாங்க, ஊசி போட்டுக்கொள்ள என ஆங்காங்கே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் சுகதாரத்துறையினர் செயல்பட மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக குறித்த நேரத்தில் மருத்துவர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: