பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் ஜல்லிக்கட்டு போராட்ட சாலையில் திரண்ட மாணவர்களால் பரபரப்பு போலீஸ் குவிப்பு

திருச்சி, மார்ச் 15:  திருச்சி கோர்ட் அருகே ஜல்லிக்கட்டு போராட்ட சாலையில் பொள்ளாச்சி பாலியம் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டதால் அவர்களை போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், புகார் அளித்த பெண்ணின் பெயரை கூறிய எஸ்பியை சஸ்பெண்ட் செய்யக்கோரியும் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சி தென்னூர் எம்ஜிஆர் சிலை அருகே பின்புறம் உள்ள ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்ற சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டனர். அனைவரும் கையில் பேப்பர் சாட், ஸ்கெட்சுடன் திரண்டு பொள்ளாச்சி பிரச்னை குறித்து வாசகங்களை எழுதி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே மாநகராட்சி சார்பில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையில் நடைபயிற்சி சென்ற ஒருவர் அவசர போலீசுக்கு தகவல் அளித்தார்.  உடனடியாக கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விஜய்பாஸ்கர் போலீசாருடன் சென்று அங்கு குவிந்திருந்த மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் நியாயமானது, இது குறித்து முறையாக போலீசாரிடம் அனுமதி வாங்கி போராட்டம் நடத்தினால் பிரச்னை இல்லை. அனுமதி இல்லாமல் தற்போதைய சூழலில் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள். அசாதாரண சூழல் நிலவுவதால் கலைந்து செல்லுமாறு கூறினர். இதனை ஏற்ற மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  ஆனாலும் பதற்றம் குறையாத போலீசார் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் துவங்க இருப்பதை தவிர்ப்பதற்காக சாலையோர பூங்காவில் அமர்ந்திருந்த ஆண்கள் மற்றும்  குடும்ப உறுப்பினர்கள், காதலர்களிடம் கெடுபிடி விசாரணை நடத்தினர்.

இதில் ஒரு சில காதல் ஜோடிகள் தலைதெறிக்க ஓடினர்.

Related Stories: