அரசியல்கட்சி பிரதிநிதிகளுக்கான விளக்க கூட்டம்

புதுச்சேரி, மார்ச் 15: புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சிறப்பாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சுயேட்சையாக தேர்தலில் நிற்க விரும்புவோருக்கும் விளக்க நிகழ்வு இன்று (15ம் தேதி) மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடக்கிறது. இப்பயிற்சி முகாமில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அதிகாரிகள், வேட்பு மனு தாக்கலுக்கு ஏதுவாக செய்யப்பட்டுள்ள வசதிகள், தேர்தலுக்கான கட்டுப்பாடுகள், நேர்மையாக வாக்களித்தல், பொதுமக்கள் குறைதீர்த்தல், மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்,

தேர்தல் செலவின கட்டுப்பாடுகள், அரசியல் சார்பான கூட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்கு அனுமதி பெறும் முறைகள், தேர்தல் தொடர்பான வங்கி பண பரிவர்த்தனைகள், ஊடக விளம்பரங்களுக்கு உண்டான சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு, வாக்குச்சாவடி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள உறுதியளிக்கப்பட்ட அடிப்படை வசதிகள், குறையில்லா வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள், மாற்றி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் விவரங்கள் போன்றவற்றை அதிகாரிகள் விளக்குவார்கள். ஆகையால், விளக்க முகாமில் பங்குபெற அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும், சுயேட்சையாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களும் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: