இரண்டு மாத சம்பளம் வழங்காததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

சத்தியமங்கலம், மார்ச் 14:  இரண்டு மாத சம்பளம் வழங்காததால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள்  500 பேர் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. சாலை பராமரிப்பு பணி, குளம், குட்டை தூர்வாருதல், சாலையோரம் மரக்கன்று நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம் அவர்களது வங்கி கணக்கில்  செலுத்த வேண்டும் என்பது நடைமுறை.

இந்நிலையில், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்களில் இத்திட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தொழிலாளர்கள் வலியுறுத்தியும் சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சுமார் 500 பேர் சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி, பவானிசாகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத் தொகை உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: