சாலையோர கடைகளை அகற்ற கலெக்டரிடம் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 12:திருப்பூர்  மாவட்டத்தில் கடை வியாபாரிகளை பாதிக்கும் சாலையோர கடைகளை அகற்ற வேண்டுமென  கலெக்டரிடம் திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள்  மனு  கொடுத்துள்ளனர்.இது குறித்து திருப்பூர் மாவட்ட வியாபாரிகள்  சம்மேளத்தின் மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலை  ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுகாதாரமற்ற வகையில்  காய்கறிகள், மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் வைத்து வியாபாரம்  செய்கின்றனர். இவர்களிடம் ஒரு சில அமைப்புகள் சுய லாபத்திற்காக சந்தா என்ற  பெயரில் பணம் வசூலித்து உறுப்பினர் அட்டைகளை வழங்கி பாதுகாப்பு அளித்து  வருகிறது. கடை நடத்த முறையான உரிமம் பெற்று அனைத்து வகையான வரியினங்களை  செலுத்தி தொழில் செய்து வருகிறோம். எங்களின் கடைகளுக்கு அருகிலேயே  நடைபாதைகளை ஆக்கிரமித்தும், சுகாதாரமற்ற வகையில்  பல்வேறு பொருட்களை வைத்து  வியாபாரம் செய்கின்றனர். இதனால் எங்களுடைய வியாபாரம் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்தியும்,  கட்டடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்தி வருகிறோம். சாலையோர கடை  வியாபாரிகளால் எங்களுக்கு வியாபாரம் இன்றி வட்டிக்கு பணம் வாங்கி வாடகை  செலுத்தி தொழில் செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடை வியாபாரிகளின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில்  சாலையோர கடைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: