மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்

புதுச்சேரி, மார்ச் 7: புதுவை மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத்தயார் என்று முதல்வர் நாராயணசாமி பேசினார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் 45 அடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், சக்தி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொகுதி காங்கிரசார் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:தலைவர்களையும், தொண்டர்களையும் தொடர்பு ஏற்படுத்தும் திட்டம் தான் சக்தி. இத்திட்டத்தில் உறுப்பினராவது மட்டுமின்றி, உறவினர்கள், நண்பர்களையும் இதில் சேர்க்க வேண்டும். இது குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ஆலோசிக்க இக்கூட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடியாலும், கவர்னர் கிரண்பேடியாலும், எதிர்கட்சி தலைவர் ரங்கசாமியாலும் ஆட்சிக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்த 3 பேரும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நிறைவேற்ற தினம், தினம் முட்டுக்கட்டை போடுகின்றனர். காங்கிரஸ் எதிரி, என்ஆர் காங்கிரஸ் துரோகி, ரங்கசாமி முதுகில் குத்திவிட்டார்? துரோகியை மன்னிக்கவே மாட்டேன் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால் அதிமுகதான் இன்று என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. நாட்டில் கருப்பு பணத்தை, கள்ள பணத்தை ஒழிப்போம், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் போடுவோம், ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை தருவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை எதுவுமே நடக்கவில்லை, செய்யவில்லை. 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து, துக்ளக் ஆட்சி நடத்தி வருபவர் தான் மோடி. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம் வாசலில் பணம் எடுக்க காத்திருந்த 169 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆனாலும் கருப்பு பணம் வெளியே வரவில்லை, கள்ளப்பணமும் ஒழியவில்லை. மோடி ஆட்சி கமிஷன் ஆட்சி. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது 9 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது. தற்போது ஆறரை சதவீதமாகி விட்டது. இனி மோடிக்கு மக்கள் ஓட்டுப்போட்டால் நாடு குட்டிச்சுவராகி விடும். ரங்கசாமிக்கு எப்போதும் முதல்வர் பதவிமேல் தான் ஆசை.புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ராகுல்காந்தி விரைவில் அறிவிப்பார். என்ஆர் காங்கிரசுடன் அதிமுக கூட்டணி வைத்ததை ஜெயலலிதா ஆத்மா கூட மன்னிக்காது. தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடப்பதாக கூறி வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால் அதே கட்சி, இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி.

புதுச்சேரியில் ஒரு பேயை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறோம். அதனை விரட்டியடிக்கும் காலம் வந்து விட்டது. புதுச்சேரி மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுபோல் தியாகம் செய்ய ரங்கசாமி தயாரா? ஆண்டுக்கு ரூ.400 கோடி வருமானத்தை அதிகரித்துள்ளோம். மேலும் கடந்த காலத்தில் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தி வருகிறோம். இவ்வளவு நெருக்கடியிலும் புதுச்சேரி அரசு பல விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காமராஜர்நகர் தொகுதியில இருந்து அதிக வாக்குகள் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பேசும்போது, புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும், மாநில வளர்ச்சிக்காகவும் முதல்வர் நாராயணசாமி இரவு பகலாக பாடுபட்டு வருகிறார். ஆனால், மோடியும், பேடியும் திட்டங்களை நிறைவேற்ற இடையூறாக இருந்து வருகின்றனர். பூத் நிர்வாகிகள் இதுபற்றி ஒவ்வொருவரது வீட்டுக்கும் சென்று மக்களிடம் புரிய வைக்க வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக தமிழக, புதுச்சேரியில் இருந்து தேர்வாகும் எம்பிக்களின் பங்கும் இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றார்.

Related Stories: