கிறிஸ்தவர்களின் 40 நாள் உபவாசம் தொடங்கியது

புதுச்சேரி, மார்ச் 7:   கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்கால உபவாசம் சாம்பல் புதனுடன் நேற்று தொடங்கியது.இயேசு  உயிர்த்தெழுந்த தினத்தை வருடந்தோறும் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள்  கொண்டாடுகின்றனர். இதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக (உபவாச நாட்கள்)  கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் முதல்நாள் சாம்பல் புதன்கிழமையாக  அனுசரிக்கப்படும். கடந்த ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை  கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனியில் பங்கேற்று தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்  சென்ற ஓலைகளை தங்களது தேவாலயங்களில் ஒப்படைத்தனர். அவை  எரித்து சாம்பலாக்கப்பட்ட நிலையில் நேற்று சாம்பல் புதன் தொடங்கியது.இதையொட்டி  புதுவையில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் காலையில் சிறப்பு  திருப்பலிகள் நடைபெற்றன. அப்போது திருப்பலி நிறைவேற்றிய பங்குதந்தையர்கள்,  ஒவ்வொருவரின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.நேற்று ஒருசந்தி உபவாசத்தை அனுசரித்த கிறிஸ்தவர்கள்,  நாளை முதல் பெரிய புனித வெள்ளிவரை அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு  வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதைகளை தியானிப்பர். தவநாட்களில் ஆடம்பரத்தை  தவிர்த்து விரதமிருந்து ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபடுவர். ஏழைகளுக்கு  அன்னதானம் வழங்குவர். பங்குமக்கள் திரண்டு வெளியூர்களில் உள்ள முக்கிய  திருத்தலங்களுக்கு தவக்கால திருப்பயணம் மேற்கொள்வர்.

Related Stories: