முத்தியால்பேட்டையில் அதிமுக-என்ஆர் காங். பயங்கர மோதல்

புதுச்சேரி, பிப். 14: முத்தியால்பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடர்பாக அதிமுக, என்ஆர் காங்கிரஸ் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுவை, முத்தியால்பேட்டை வண்டிக்கார வீதி (சிறிய சந்து பகுதி) நீண்ட நாட்களாக சாலைப்பணி நடைபெறாமல் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் பிரகாஷ்குமார் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் சார்பில் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்து தற்போது அங்கு சாலைப் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக அப்பகுதியில் மணல் லோடு கொட்டப்பட்டிருந்த நிலையில், ஒரு வீட்டின் வாய்காலை அடைத்தபடி கிடந்ததால் உரிமையாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று காலை சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 தகவல் கிடைத்து அங்கு வந்த என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் பிரகாஷ்குமார் மற்றும் சிலர் 10 நாட்களில் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விடும் எனக் கூறி அவரை சமாதானப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைக்கவே அங்கு விரைந்து வந்த தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 பேர் சம்பவம் பற்றி அங்கிருந்த மக்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள ரொசாரியோ வீதிக்கு சென்ற அதிமுகவினர், அங்கு வீட்டில் இருந்த என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் பிரகாஷ்குமார் மற்றும் தொண்டர்களை இவ்விவகாரம் தொடர்பாக தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

 இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ேஹமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர். இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். அதன்பிறகு தாக்குதலில் காயமடைந்த என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் ராமு உள்ளிட்ட 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இச்சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. அசம்பாவிதம் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். ேமலும் தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினரை தேடி வருகின்றனர்.

Related Stories: