உடுமலை நகரில் செயலிழந்த ஆழ்குழாய் கிணறுகள்

உடுமலை, பிப். 13:  உடுமலை நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் செயல்படுவதில்லை.

 உடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும், திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது 24 மணி நேர குடிநீர் திட்டம் அமலில் உள்ளதால், நகரில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கிறது. முன்பு குடிநீர் தட்டுப்பாடு நிலவியபோது, நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. தற்போது, குடிநீர் தட்டுப்பாடு இல்லாததால் இந்த ஆழ்குழாய் கிணறுகள் செயல்படுவதில்லை. பராமரிப்பின்றி, ஆழ்குழாய் கிணறுகள் உள்ள பகுதி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வீணாகும் நிலையில் உள்ளது.

 அவ்வப்போது, ஆழ்குழாய் கிணறுகளை இயக்கி தண்ணீர் விநியோகித்தால் தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கும். வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும், திருவிழா காலங்களில் திரளும் மக்களுக்கும் இந்த தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். எதிர்பாராத விதமாக திருமூர்த்தி குடிநீர் திட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால், பராமரிப்பில்லாத ஆழ்குழாய் கிணறுகளை இயக்குவது சிரமமாகிவிடும். எனவே, ஆழ்குழாய் கிணறுகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: