வறட்சியால் கருகிய மஞ்சள் செடிகள்

காரிமங்கலம், ஜன.22: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் வறட்சியால் மஞ்சள் செடிகள் கருகி விட்டன. இதனால் பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் பயிரிடுதல் பிரதானமாக உள்ளது. குறிப்பாக, நாகணம்பட்டி, திண்டல், எலுமிச்சனஅள்ளி, பந்தாரஅள்ளி, கெண்டிகாணஅள்ளி, முக்குளம், எர்ரசீகலஅள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். கடந்த காலங்களில் மஞ்சள் சாகுபடிக்கு தகுந்த அளவு தண்ணீர் கிடைத்ததால், மஞ்சள் பயிர் நன்றாக விளைந்து விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டி தந்தது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், வறட்சியாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. விவசாய பயிர்கள் பாதிப்பில் மஞ்சளும் தப்பவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகள் கடன் வாங்கி தங்கள் நிலங்களில் மஞ்சள் பயிரிட்டிருந்தனர். வறட்சியாலும், போதிய நீர் இல்லாததால் மஞ்சள் பயிரை காப்பாற்ற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டது. சில விவசாயிகள் மட்டும் டிராக்டரில் தண்ணீர் வாங்கி மஞ்சளுக்கு பாய்ச்சினர். பெரும்பாலான இடங்களில் மஞ்சள் கருகி போயிருப்பதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தமிழக அரசு மஞ்சள் பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: