நேருவீதியில் வாய்க்கால் கழிவுகளால் போக்குவரத்து நெரிசல் அபாயம்

புதுச்சேரி,   ஜன. 10:  நேருவீதியில் வாய்க்கால்களை தூர்வாரி சாலையில் குவித்து   வைக்கப்படும் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் அங்கு போக்குவரத்து   நெரிசல் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க   வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புதுவை நேரு வீதியில் 6   மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறை பார்க்கிங் நடைமுறையில் உள்ளது. ஆனால்   ஜனவரி முதல் வாரத்தில் நடைமுறைக்கு வரவேண்டிய இத்திட்டம் ஒரு மாதத்திற்கு   தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேருவீதியில் பொதுப்பணித்துறை மற்றும்   நகராட்சி மூலம் நடைபெறும் பணிகள் காரணமாக அவற்றை செயல்படுத்த முடியாத நிலை   இருப்பதாக போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த   நிலையில் தற்போது நேருவீதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக   நடைபெற்று வருகிறது. இவ்வாறு வாய்க்கால்களை தூர்வாரி சாலையில்   குவிக்கப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.   இதனால் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகளால் சாலை மிகவும் குறுகலாகி   அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 இதனால் வியாபரிகள்,   பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் வாகனங்களை நிறுத்துவதிலும்   சிரமம் நீடிக்கிறது. எனவே வாய்க்கால்களை தூர்வாரி எடுக்கும் கழிவுகளை   உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள்   வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிடில் பொங்கல் பண்டிகை காலத்தில் நேருவீதியில்   போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

Related Stories: