புதுவையில் விற்பனைக்கு வந்துள்ள பொங்கல் பானைகள், அடுப்புகள்

புதுச்சேரி, ஜன. 10:  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் தற்போதே தயாராகி வருகின்றன. இதற்காக பொங்கல் மண்பானைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பொங்கல் அன்று புதிய அடுப்பில், புத்தம் புதிய மண்பானையை வைத்து புதிய அரிசியை போட்டு, பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுவதை தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டுள்ளனர். பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வில்லியனூர், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் மண்பானைகள் தயாரிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விதவிதமான அளவுகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு அவை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மண் அடுப்புகளும் விற்பனைக்கு நகரம், கிராமப்புறங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை கடந்தாண்டைவிட ரூ.10 முதல் ரூ.90 வரை அதிகரித்துள்ள நிலையிலும் பொங்கல் பானை, அடுப்பு விற்பனை இன்னும் சூடுபிடிக்க வில்லை. ஞாயிற்றுக் கிழமைக்கு பிறகு பொங்கல் பானைகள், அடுப்புகள் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: