தலைமை தபால் நிலையத்தை மூடி அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி,  ஜன. 10:   புதுச்சேரி மத்திய தபால் நிலைய ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர்  பணிகளை புறக்கணித்து தபால் நிலையத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொழிலாளர்  உரிமைகளை பரிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜ அரசை கண்டித்து  தொழிற்சங்கத்தினர் கடந்த 2 நாளாக பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுவையில் நேற்றுமுன்தினம் முழுஅடைப்பு நடைபெற்றது. இதனால் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2வது நாளாக பொது வேலை  நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர்  சங்கம் சார்பில் புதுவையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சலக  ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 புதிய ஓய்வூதிய  திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும், ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு கமலேஷ் கமிட்டியின்  பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சலக  ஊழியர்கள் தலைமை தபால் நிலையத்தில் கதவுகளை மூடி மத்திய அரசுக்கு எதிராக  முழக்கமிட்டனர். அஞ்சலக ஊழியர்கள் போராட்டம் காரணமாக புதுவையில் தபால்  பட்டுவாடா, வங்கிச் சேவை உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  மத்தியஅரசு அஞ்சலக ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்  அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தனர்.

Related Stories: