சங்கராபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் இடிந்துவிழும் அபாயம்

வில்லியனூர், டிச. 11:  வில்லியனூர் அருகே கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் தொடர்ந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனை தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி சங்கராபரணி ஆறு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் கடத்தலில் ஈடுபடும் மாட்டு வண்டிகள், டிப்பர் லாரிகள் மற்றும் மினி வேன் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

 இந்நிலையில் செல்லிப்பட்டு ஆறு மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம், படுகை அணை உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர். இதனால் மேம்பாலம் மற்றும் படுகை அணை சேதமடைந்துள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளதால் பாலம் இடியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  இதேபோல கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் கட்டுப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மணல் கொள்ளையர்கள் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ரயில்வே மேம்பாலத்தின் தூண்களை சுற்றி கொட்டப்பட்டுள்ள பெரிய பெரிய பாராங்கற்களை அகற்றிவிட்டு தூண்களை சுற்றி மணல் அள்ளி வருகின்றனர்.

இதனால் ரயில்வே மேம்பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் ரயில்வே மேம்பாலம் வலுவிழந்து இடிந்து விழும் நிலை ஏற்படும். இத்தகைய சூழ்நிலைக்கு மேம்பாலம் அருகே உள்ள ஒருசில நில உரிமையாளர்கள் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.500 வாங்கிக்கொண்டு அவரின் நிலத்தின் வழியாக மாட்டு வண்டிகளை அனுமதிப்பதிப்பதே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: