மோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்போம்

கோவை, நவ.30: மோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் என கோவையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சஞ்சய்தத் பேசினார்.  கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ்  சார்பில், ‘’வீடு தோறும் பிரசார இயக்கம்’’ என்ற தலைப்பில் சிங்காநல்லூர் சர்க்கிள் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அருள் பெத்தையா, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். சிங்காநல்லூர் சர்க்கிள் தலைவர் ஜனார்த்தனன் வரவேற்றார்.

 இதில்,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக காங்கிரஸ் மேலிட  பொறுப்பாளருமான சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில்  மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி.  வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு  இந்தியாவுக்கு கொண்டு வருவேன். உங்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா  ரூ.15 லட்சம் செலுத்துவேன், தேசிய நதிகளை இணைப்பேன் என மோடி கடந்த  தேர்தலில் வாக்குறுதி அள்ளி வீசினார். ஆனால், ஒன்றுகூட நிறைவேற்ற வில்லை. நமது வங்கி கணக்கில் பதினைந்து பைசாகூட வரவில்லை.

 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என அடுத்தடுத்து சுமைகளை ஏற்றி, மக்களை கொடுமைப்படுத்தியதுதான் மிச்சம். தொழில்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது. புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை. உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் என எல்லாம் விலை உயர்ந்துவிட்டது. பெட்ரோல் 100 ரூபாய், சமையல் காஸ் 1000 ரூபாய் என நெருங்கி கொண்டிருக்கிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியையும், மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசையும் வீழ்த்த காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும். இந்த தேர்தலை ஒரு யுத்த களம்போல் கருதி, அந்த அளவுக்கு வேகமாகவும், விவேகமாகவும் பணியாற்றி வெற்றி தேடி தர வேண்டும்.இவ்வாறு சஞ்சய் தத் பேசினார்.   கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், சவுந்தரகுமார், கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் கருப்புசாமி, இராம.நாகராஜ், கருணாகரன், தங்கம் பழனிசாமி, துரைசாமி, நாகராஜ், ராமசாமி, சிவக்குமார், குமரேசன், ஜெகதீசன், ஷேக் முகமது, உமா மகேஸ்வரி, வடவள்ளி காந்தி, கோட்டை செல்லப்பா, கேபிள் வினோத், துளசிராஜ், ஜெகநாதன், கணேசன், நாகராஜ், சண்முகம், டென்னிஸ் செல்வராஜ், முத்தையா, காமராஜ்துல்லா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: