ஈரோடு அருகே நடந்த 40 பவுன் கொள்ளை சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் திடீர் பல்டி

ஈரோடு, நவ. 14: ஈரோடு அருகே நடந்த 40 பவுன் கொள்ளை சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் திடீரென புகார் வேண்டாம் என கூறியதால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு சோலார் நொச்சிக்காட்டு வலசு பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெசிமா பேகம்(45). இவர் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 10ம் தேதி இரவு முகமூடி கொள்ளையர்கள் புகுந்து ஜெசிமா பேகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ. 1லட்சத்து 10ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் எஸ்பி சக்தி கணேசன், டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக வீட்டின் உரிமையாளர் ஜெசிமா பேகம் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வருவதாகவும், 40 பவுன் கொள்ளை போகவில்லை 35 பவுன் மட்டுமே கொள்ளை போனதாகவும், வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜெசிமா பேகம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே காதல் கணவரிடம் விவகாரத்து பெற்றார். பின்னர் அவர் பியூட்டி பார்லர் சொந்தமாக வைத்து நடத்தி வந்தார். அதன்பிறகு ஜெசிமா பேகத்திற்கு  சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த தோல் கம்பெனி வியாபாரி ஜாபா் பாபு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

அவரிடமும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. கொள்ளை சம்பவம் நடந்தபோது ஜெசிமா பேகத்தின் வீட்டில் கொள்ளையர்கள் வீட்டின் சாவி, பீரோ, கபோர்டு ஆகியவற்றின் ஓரிஜினல் சாவியை கொண்டு தான் திறந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் ஜெசிமாபேகம் அலுவலகத்தில் இருந்து இரவு வந்தபோது தான் கொள்ளையர்கள் இவரை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளையடித்ததாக கூறினார். போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த சேலைகள் வீட்டின் அறையில் கிடந்தன. இதன்பிறகு தான் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் ஜெசிமா பேகம் இதுதொடர்பாக முன்னுக்கு பின் முரணாகவும், புகார் எதுவும் வேண்டாம் என சொல்வதால் இவர் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களையும், உண்மை சம்பவத்தையும் கண்டுபிடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: