தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க தடையால் களையிழந்த கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, நவ.8: தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ததால் கொண்டாட்டம் களையிழந்தே காணப்பட்டது.

 தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. காலையிலேயே சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் எண்ணெய் தேய்த்து குறித்து புத்தாடை அணிந்து அரசு நிர்ணயித்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்தனர். பின்னர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற கோயில்களான தேவசமுத்திரம் அருகே உள்ள காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில், பழையபேட்டை கவீஸ்வரன் கோயில், சென்னை சாலையில் உள்ள பெரியமாரியம்மன் கோயில், ராசுவீதியில் உள்ள சிவன் கோயில், பர்கூர் காளியம்மன் கோயில், பெண்ணேஸ்வரமடம் சிவன் கோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 அதேபோல், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, வீடுகளில் செய்த பலகாரங்களை தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம், தமிழக அரசு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்திருந்ததால் சிறுவர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடிக்க தயங்கினர். மேலும், பட்டாசு கடைகளிலும் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. இதனால் தற்காலிகமாக கடை வைத்தவர்கள் வியாபாரமின்றி கவலையடைந்தனர்.

மேலும், நேற்று (7ம் தேதி) அமாவாசை என்பதால் கிராமப்புறங்களில் நோன்பு பண்டிகை அதிகளவில் கொண்டாடப்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, பழையபேட்டை பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புது பானைகள், நோன்பு கயிறுகளை வாங்கி சென்றனர். அத்துடன் பட்டாசு கடைகளில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. இந்த நோன்பு பண்டிகையின் போது வீடுகளில் வெள்ளம் மற்றும் சர்க்கரையை கொண்டு அதரசம் தயார் செய்து, அதை புது பானைகளில் வைத்து சுவாமிக்கு படையலிட்டு, சுவாமியை வழிபட்டனர். 

Related Stories: