111வது ஜெயந்தி தேவர் சிலைக்கு அனைத்துகட்சியினர் மரியாதை

தென்காசி, நவ. 2: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தியையொட்டி தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது சிலை, படத்திற்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். தென்காசி மலையான் தெருவில் உள்ள தேவர் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமையில் நகரச் செயலாளர் சாதிர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கோமதிநாயகம், இசக்கிபாண்டியன், நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், பால்ராஜ், பாலசுப்பிரமணியன், ஷேக்பரீத், அப்துல்கனி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர். அதிமுக நகர செயலாளர் சுடலை தலைமையில் வக்கீல்கள் சின்னத்துரை பாண்டியன், செல்லத்துரை மற்றும் நகர நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அமமுகவினர் நகர செயலாளர் துப்பாக்கி பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்தனர். பாஜ சார்பில் நகர தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் மாலை அணிவித்தனர். காங்கிரசார் மேற்கு மாவட்டத் தலைவர் பழனி நாடார் தலைமையில் மாலை அணிவித்தனர். நகர தலைவர் காதர்மைதீன், காஜாமைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமாகாவினர் மாவட்டத் தலைவர் அய்யாத்துரை தலைமையில் மாலை அணிவித்தனர். மலையான்தெரு தேவர் இளைஞரணி, பசும்பொன் சுவாமி இயக்கம், சிம்மபடையினர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கினர்.

இதேபோல் கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். வேதம்புதூரில் தேவர் சிலைக்கு திமுக இளைஞர் அணியினர் மாவட்ட துணை அமைப்பாளர் குத்துக்கல்வலசை அழகுசுந்தரம் தலைமையில் மாலை அணிவித்தனர். நாங்குநேரியில் தேவர் சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், திமுக சார்பில் நகர செயலாளர் வானமாமலை, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி அருணாசலம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். களக்காட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவர் படத்துக்கு திமுக மாவட்ட துணை செயலாளர் சித்திக் தலைமையில், ஒன்றிய செயலாளர் ராஜன், நகரச் செயலாளர் சிவசங்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வி.கே.புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தேவர் படத்திற்கும், டாணாவில் உள்ள தேவர் சிலைக்கும் தேவர் பேரவையினர் மாலை அணிவித்தனர். பல்வேறு இடங்களில் பேரவை கொடியேற்றப்பட்டு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. டாணாவில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அம்பையில் தேவர் ஜெயந்தி, பூலித்தேவரின் 303வது பிறந்த நாள் விழா, மருது சகோதரர்களின் 217வது ஜெயந்தி என முப்பெரும் விழா நடந்தது. இதையொட்டி அம்பை அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். பள்ளி குழந்தைகள் 200 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

Related Stories: