பொதுமக்களிடம் மீண்டும் நிதி கேட்கும் கவர்னர் கிரண்பேடி

புதுச்சேரி, நவ. 2:   புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) கீழ் தன்னார்வலர்களிடம் இருந்து கவர்னர் கிரண்பேடி நிதி பெற்று, 84 ஏரி, 600 குளங்கள், 24 தண்ணீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. விதிகளை மீறி சிஎஸ்ஆர் நிதியை வசூலித்து கவர்னர் மாளிகை முறைகேடு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி பதில் அளிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமியும் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கிரண்பேடியும் பதில் அளித்திருந்தார்.  இந்நிலையில், கிராமப்பகுதியை போல் நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட வேண்டும். தனியாக பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தேன். அதிகாரிகள் எப்படி பணி புரிகிறார்கள் என்பது குறித்து திடீர் ஆய்வு செய்யவும் முடிவு செய்திருந்தேன். அதன்படி, நேற்று நகரப்பகுதியில் உள்ள 2 இடங்களுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தேன். அது எனக்கு திருப்திகரமாக இல்லை.

 அந்த இடங்களில் ஒப்பந்ததாரர்கள் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கவில்லை. அப்போது இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் மட்டும் வந்தனர். கீழ்நிலை பணியாளர்கள் யாரும் அங்கு இல்லை.

 எனவே, தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளாமல் ராஜ்நிவாசுக்கு திரும்பி விட்டேன். இது தீபாவளி மற்றும் பருவமழை நேரம். அதனால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என திரும்ப திரும்ப அறிவுறுத்தி வருகிறேன். வெள்ளம் வருவதற்கு முன்பு தடுக்க வேண்டியது அவசியம். எனவே, நகர மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். நகரப்பகுதியில் நடக்கிற பணிகளை பொதுமக்கள் தத்தெடுத்துக் கொள்ளுங்கள். கிராமப்புற பகுதிகளில் தூர்வாரும் பணியை தன்னார்வலர்கள் தானாக முன் வந்து செய்தார்கள். அதேபோல் நகர பகுதியில் தூர்வாரும் பணியை பொதுமக்கள் தத்தெடுத்து கொள்ளுங்கள். ஒப்பந்ததாரர்கள் மிகவும் மெதுவாக பணிபுரிகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், அவர்களுக்கு நிதி சரியாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தூர்வாரும் பணியில் போதிய இயந்திரங்களையும் ஈடுபடுத்தவில்லை.

Related Stories: