ஓமலூர் ஒன்றியத்தில் ₹1 கோடி மதிப்பிலான சாலை பணிகள் தொடக்கம்

ஓமலூர், நவ.1:  ஓமலூர் ஒன்றியத்தில் 4 கிராமங்களில் ₹1 கோடி மதிப்பிலான புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஓமலூர் அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் இருந்து குருவம்பட்டி மலை கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதேபோன்று வெள்ளாளப்பட்டி, சர்க்கரை செட்டிப்பட்டி, தும்பிபாடி கிராமம் ஒட்டத்தெரு ஆகிய கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. மேலும், ஓமலூர் வந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் வெள்ளாளப்பட்டி குருவம்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைக்க ₹27 லட்சம், வெள்ளாளப்பட்டி, சர்க்கரை செட்டிப்பட்டியில் ₹45 லட்சம், தும்பிபாடி ஒட்டத்தெருவில் ₹38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தார்சாலை அமைக்கும் பணியை ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், ராஜேந்திரன், தளபதி, ராஜா, துரை, சதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: