கண்மாய்களை தூர்வாரக் கோரிக்கை

திருச்சுழி, நவ. 1: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியில் அதிகமாக கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் ஒன்றியத்துக்கு சொந்தமான கண்மாய்கள் ஏராளமாக உள்ளன. இவைகள் பெரும்பாலும் தூர்வாரப்படாமல் முட்புதர், கருவேலமரம், ஆகாய தாமரை ஆக்கிரமித்து காணப்படுகிறது. நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களின் நிலையும் இதேபோலத்தான் உள்ளது. அதே சமயத்தில் கண்மாய்களின் வரத்துக் கால்வாய்கள் சேதமடைந்து தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், மழைநீர் கண்மாய்க்கு முழுமையாக செல்வதில்லை. மழை தொடர்ந்து பெய்து கண்மாய் நிரம்பினால் மட்டுமே விவசாயம் முழுமையடையும். மழை நீரையும் சேமிக்காவிடில் விவசாயிகள் எந்த நம்பிக்கையில் விவசாயம் செய்ய முடியும்.

வறட்சி காரணமாக ஆண்டுதோறும் பயிர் சாகுபடி பரப்பு குறைந்து விளைநிலங்கள் தரிசாக மாறி வருவது கவலையளிக்கிறது. எனவே. வடகிழக்கு பருவவழை காலங்களில் மழை நீரை சேமிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். சேதமடைந்த வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நரிக்குடி காந்தி கூறுகையில்: நரிக்குடி கண்மாய் தூர்வரப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. நீரை சேமிக்காமல் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.கண்மாயிலுள்ள முட்புதர்களை அகற்றி, ஆழப்படுத்தி அதனை முழுமையாக தூர்வாரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும்’ என கூறினார்.

Related Stories: