கிணற்றில் தவறி விழுந்த மிளா

கடையம், அக். 17:  கடையம் தர்மபுரமடம் ஊராட்சி சம்பன்குளத்தை சேர்ந்த சைலப்பன் என்பவருக்கு இதே பகுதி விளாத்திகுளம் அருகே கிணற்றுடன் கூடிய தோப்பு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் இரை தேடி வந்த மிளா தவறி விழுந்தது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் கடையம் வனச்சரகத்திற்கு தகவல் கொடுத்தனர்.  அம்பை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஓம்காரகொம்மு உத்தரவுப்படி, கடையம் வனச்சரகர் நெல்லைநாயகம் அறிவுறுத்தலின் பேரில், வனவர் முருகசாமி ஆலோசனைப்படி வேட்டை தடுப்பு காவலர்கள் பசுங்கிளி, வேல்சாமி, வேல் முருகன், சக்தி முருகன், பேச்சிமுத்து மற்றும் தர்மபுரமடம் பஞ். முன்னாள் தலைவர்  ரசூல் முகம்மது தலைமையில் ஊர் மக்கள் கிணற்றில் விழுந்த மிளாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இறங்க படி வசதியில்லாததால் கயிறு மூலம் மிளாவை பிடிக்க திட்டமிட்டனர். பல மணி நேரம் போராடி மிளாவை மீட்டனர்.  மிளா கடுமையாக கத்தியதால் அனைவரும் மிரண்டனர். 3 வயதுடைய இந்த ஆண் மிளாவை டிராக்டரில் கொண்டு சென்று கடனா அணை வாலையாறு பீட் பகுதியில் விட்டனர்.

Related Stories: